டில்லி,
இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று 4வது கட்ட பேச்சு வார்த்தை டில்லியில் நடைபெற்றது. இதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இலங்கை உறுதி அளித்து உள்ளது.
இந்தியா – இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. சர்வதேச கடல் பகுதி அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று கைது நடவடிக்கை மேற்கொள்கிறது. மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.
இது தமிழகத்தில் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை நிறுத்தம் போன்ற தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய – மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இந்தியா – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண இருநாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்தன.
இதுவரை 3 கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
4வது கட்ட பேச்சு வார்த்தை டில்லியில் கடந்த 2ந்தேதியன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு மீனவர்கள் அமைப்புகளும், தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், தமிழக மீனவர்கள் தரப்பில் பேசும்போது, இலங்கை பறிமுதல் செய்துள்ள 114 படகுகளையும், 9 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், 83 நாட்கள் கடலில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள்.
இரு தரப்பினரும் மனம் விட்டு நிறைய விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர். இலங்கை தரப்பில் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று இருநாட்டு அமைச்சர்கள் வட்டத்திலான பேச்சுவார்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்தும் பேசப்பட்டது.
இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண் மற்றும் மீன் வளத்துறை மந்திரி ராதா மோகன்சிங், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், இலங்கை சார்பில் வெளியுறவுத் துறை மந்திரி மங்கள சமவீரா, மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமர வீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் மீன்பிடிப்பது தொடர்பான எல்லை வரையறை மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை விடுவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் இலங்கை மந்திரிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
மீனவர்கள் எல்லை தாண்டும் போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் வழங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக உயிர்சேதம் ஏற்படாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது
அவசர அழைப்புகளான தொலைபேசி எண்கள் அமைக்க இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புதல்
6 மாதங்களுக்கு ஒரு முறை இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டமானது நடத்தப்படும் என முடிவெடுக்கப்படுள்ளது
மீனவர் பிரச்சனையை தீர்ப்பதற்காக கூட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த கூட்டு குழு கூட்டத்தில் படகுகளை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
இந்த கூட்டு குழு கூட்டமானது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும்.
அதேபோல், மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும்’’ என்றனர்.