சென்னை:
ரெம்டிசிவிர் மருந்துகள் அனைவருக்கும் உரிய முறையில் விநியோகிப்பதை உறுதிசெய்யவேண்டும்; கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், 159 இடங்களைக் கைப்பற்றி, தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 7-ம் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக தலைமைச் செயலகம் சென்ற மு.க.ஸ்டாலின், ஒரே நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். தொடர்ந்து, பதவியேற்ற முதல் நாளே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மேலும், மே 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. காய்கறி, மளிகை கடைகள், பால் கடைகள் ஆகியன மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரெம்டிசிவிர் மருந்துகள் அனைவருக்கும் உரிய முறையில் விநியோகிப்பதை உறுதிசெய்யவேண்டும்; கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்று அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளார்.