லக்னோ:

உ.பி. முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு யோகி ஆதித்யநாத் பிரத்யே பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், ‘‘நான் முழுநேர அரசியல் வாதி கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். எனக்கு உ.பி.யை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் வழங்கியுள்ளனர்’’என்றார்.

இந்தியாவை வழிநடத்தும் வாய்ப்புகள் குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘தற்போது வழங்கப்பட்டுள்ள பொறுப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர் எனது ஆசிரமத்திற்கு விரைந்து திரும்ப சென்றுவிடுவேன். நான் எனது வாழ்நாள் முழுவதையும் அரசியலுக்காக அர்ப்பணிப்பேன் என்று நினை க்கவில்லை’’ என்றார்.

யோகி ஆதித்யநாத் தற்போது எம்எல்ஏ கிடையாது. முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தற்போது இவர் அயோத்தி தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.

இது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,‘‘ நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்’’ என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘‘கடந்த 100 நாட்களில் பல சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மேம்பாடு போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனது ஆட்சியின் கீழ் எந்த சமுதாய மக்களும் அச்சத்துடன் வாழக்கூடாது’’ என்றார்.

யோகி மேலும் கூறுகையில்,‘‘ ராமர் கோவில் விவகாரத்தில் தடங்கல்களை விலக்கி அமைதியான தீர்வை ஏற்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அமைச்சர்களின் செயல்பாடு கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. எனது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது’’ என்றார்.