சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசும்போது, நிகழ்ச்சியில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் கால்களை தினந்தோறும் சுத்தப்படுத்துவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தோம்  என்றம்,  தமிழ்நாட்டில் 8,023 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு 4-ம் நிலை நோயாளிகளாக தடுமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு தமிழகஅரசு  கடந்த 2010-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.  இது தவிர 5,000 பேர் முதல்நிலை யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  யானைக்கால் நோய் தொற்று நோய் அல்ல குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், இன்னொருவருக்கு பரவாது. யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ச்சியாக கண்காணித்து உரிய சிகிச்சையளித்து வருகிறது என்றார்.

இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர்,  தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இறப்பு இல்லாத நிலை தொடர்கிறது என்று கூறியதுடன்,  உயர்கல்வி நிறுவனங்களில் தொற்று உயர தொடங்கியதற்கு காரணம் இந்தியாவின் பிற மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வராமல் இருப்பதே என்றார்.

தமிழக கல்வி நிலையங்களுக்கு படிக்க வரும், வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களே, தமிழ்நாட்டில்,  கொரோனா தொற்றை பரப்புகின்றனர்.  தற்போது அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால், அவர்கள் குணமடைந்து வருகின்றனர்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் தொற்று எண்ணிக்கை 23-ஆக இருக்கிறது என்றார்.