சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18ந்தேதிகளுக்குள்  தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழை தொடங்குவது பற்றி  சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   அதரன்படி,   “இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட வாராந்திர வானிலை கணிப்பின் அடிப்படையில் தென்மேற்கு பருவ மழை, வரும் (அக்டோபர்) 16-18 தேதிகளில் இந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு /வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை 16-18 அக்டோபர் 2025 துவங்குவதற்கான சாத்தியமுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.