சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் தொடங்க உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணைமுதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா உள்பட பலர் இருந்தனர்.

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்றிரவு முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உள்ள மழைநீர் வடி கால்வாய்கள் இன்னும் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ள நிலையில், மழை பெய்து வருகிறது. மேலும், பல பகுதிகளில் உள்ள சாக்கடைகள், பக்கிங்காம் கால்வாய், கேப்டன் கால்வாய் என பல கால்வாய் பகுதிகளில் தூர் வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை கண்காணிக்கும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் சென்னை ரிப்பன் மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி, அதை ஆய்வு செய்தார். அங்கிருந்து மழைநீர் தேங்கும் சாலைகள், சுரங்கப் பாதைகள், தெருக்கள் உள்ளிட்டவை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவதுகுறித்து கேட்டறிந்தார்.
மேலும், தொலைபேசி, ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தொலைபேசி மூலம் மக்களிடன் நேரடியாக உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.