சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வரும் 12ந்தேதி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும், தற்போது, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக, குளம் குட்டைகள் ஓரளவு நிரம்பி உள்ளன. விவசாயமும் செழுமையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குறித்து 12ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், இதுவரை தூர்வாரப்படாத ஏரிகள், குளங்களை உடனே தூர் வாரவும், மழை காலத்தின்போது, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல், மற்றும் பேரிடர் மீட்பு குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.