சியோல்

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தற்போது உயிருடன் நலமுடன் உள்ளார் என தென்கொரியா உறுதி செய்துள்ளது.

வடகொரிய அதிபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டார் எனும் செய்தி உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உயிருடன், நலமுடன் உள்ளதாக தென்கொரியாவின் முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதில் எந்த மர்மமும் இல்லை எனவும் அவர் உறுதி செய்துள்ளார்.

ஏப்ரல் 11 க்கு பிறகு கிம் எந்த நிகழ்விலும் பங்கேற்காததால் அவரின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவின.

நாட்டின் மிக முக்கிய தேசிய விழாவான வடகொரிய நிறுவனரும், கிம் ஜொங் உன்னின் தாத்தாவுமான கிம் II சங் கின் பிறந்தநாள் நிகழ்வு ஏப்ரல் 15 அன்று கொண்டாடப்பட்டது. முதன்மை நிகழ்வான அதில் கிம் ஜொங் பங்கேற்காததே பல வதந்திகளுக்கு தொடக்கமானது.

மார்ச் 11 அன்று நடைபெற்ற தொழிலாளர் தலைமைக் குழு கூட்டம் தான் கிம் பொதுவெளியில் பங்கேற்ற நிகழ்வாகும்.

அதன் பிறகு எந்த நிகழ்விலும் பங்கேற்காததால் கிம் பற்றிய உண்மைகள் வெளியுலகிற்கு தெரியாமல் பெரும் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் தென்கொரிய முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் கிம் யியோன் சல் திங்களன்று புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், வடகொரிய அதிபர் நலமுடன் உள்ளார். வடகொரியாவில் எவ்வித பதற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

NK எனும் ஆன்லைன் நாளிதழ்தான் முதலில் கிம் உன் உடல்நிலை குறித்து வதந்தியை பரப்பியது.  அவருக்கு கார்டியோ வாஸ்குலர் அறுவைசிகிச்சை இம்மாதத் தொடக்கத்தில் செய்யப்பட்டதாக அடிப்படை ஆதாரமற்ற வதந்தியை பரப்பியது.

மேலும்  35 வயதைத் தாண்டிய கிம் அதிக புகைபழக்கம், உடல் பருமன், இதயநோய் உள்ளிட்டவைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதனையொட்டி சிஎன்என் வாஷிங்டன் இதழ், இந்த சூழலை நன்கு கவனித்து வருவதாகவும், கிம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை மறுத்துள்ளார்.

அதிபர் கிம்,  வான்சன் கல்மா சுற்றுலா கடற்கரை தளத்தின் பணியாளர்களுக்கு கடிதம் வழியே நன்றி தெரிவித்த செய்தியை ரொடாங் சின்மன் இதழ் வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழலில் கிம் உன் பற்றிய புதிய செய்தி இதுவாகவே உள்ளது.

சென்றவாரம் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வான்சன் கடற்கரை விடுதிக்கு அவருக்கான ரயிலில் பயணித்த தாகவும் தகவல் வெளியாகியது. மேலும் அது சார்ந்த செயற்கைக்கோள் பதிவும் வெளியிடப் பட்டுள்ளது.

கிம் உன் உடல்நிலை குறித்து 2014 ஆம் ஆண்டும் இது போல் வதந்தி பரவியது. ஆறு வாரங்கள் அவர் பொதுவெளிக்கு வராததால் அப்போதும் இவ்வாறு பேசப்பட்டது.

தற்போதைய சூழலில் கிம் உன் பற்றி அவரேதான்  உலகிற்கு உறுதி செய்ய வேண்டும்…