சியோல்

இரண்டாம் முறையாக வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மீண்டும் செலுத்தியது உலக நாடுகள் இடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.

கடந்த 3 ஆம் தேதி வடகொரியா ஆறாம் முறையாக அணுகுண்டு சோதனை நிகழ்த்தியதும், அதையொட்டி ஐ நா பாதுகாப்பு கவுன்சில் வட கொரியா மீது பொருளாதார தடை கொண்டு வந்தது தெரிந்ததே.   இதனால் வட கொரியாவுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7800 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிய வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த வட கொரியா பல எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அணு ஆயுத சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.  இன்று ஜப்பான் வழியாக இரண்டாம் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வீசியுள்ளது.    ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, “இனியும் வடகொரியாவின் நடவடிக்கைகளை பொறுக்க முடியாது.   தொடர்ந்து இது நடந்தால் வடகொரியாவின் எதிர்காலமே இருளின் ஆழ்ந்து விடும்” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட கொரிய அரசு, ”ஜப்பான் நாட்டை அழிப்பது வட கொரியாவுக்கு கடினமில்லை.  நான்கு புறங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ள ஜப்பான் ஒரு அணுகுண்டு வீசினால் அழிந்து விடும்.  எங்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா விரைவில் நாய் அடி வாங்கி சாகப் போகிறது.   அமெரிக்காவுக்கு துணை போகும் ஜப்பானும் விரைவில் கடலில் மூழ்கப் போகிறது” என பதிலுக்கு சவால் விட்டுள்ளது.

இந்த இரு நாடுகளின் எச்சரிக்கை உலக நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.