அதிபருக்கு என்னாச்சு? வாயைத் திறக்காத வடகொரியா..
கொரோனா தோன்றுவதற்கு பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச நாடுகளில் இருந்து, தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட நாடு, வடகொரியா .
அதன் அதிபராக கிம் ஜோங் உன் ,பதவி ஏற்ற நாள் முதல் மற்ற நாடுகளில் இருந்து அளவுக்கு அதிகமாகவே, ’’சமூக இடைவெளியை’ கடைப் பிடித்து வருகிறது, வடகொரியா.
கடந்த சில நாட்களாக கிம் ஜோங் உன் , உடல் ஆரோக்கியம் குறித்து, பல்வேறு செய்திகள் உலவுகின்றன.
வட கொரியாவின் நிறுவனரும், ஜோங் உன்னின் தாத்தாவுமான கிம் உல் பிறந்த நாள் அண்மையில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஜோங் உன் கலந்து கொள்ளவில்லை.
‘’ கடந்த 12 ஆம் தேதி ஜோங் உன்னுக்கு இருதய ஆபரேஷன் நடந்துள்ளது. தற்போது ஓய்வில் உள்ள ஜோங் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது’’ என்று தென் கொரிய இணையதளம் செய்தி வெளியிட்டது.
இதன் பின்னர் அமெரிக்க ஊடகங்களும் இது போன்ற செய்திகளை வெளியிட்டன.
இந்த செய்திகளில் உண்மை இல்லை என்று இதுவரை வடகொரிய அரசு ஊடகம் மறுக்காமல் மவுனம் காப்பது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
அந்த நாட்டின் அரசு ஊடகத்தில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று விவாதம் நடந்துள்ளது.
ஆனால் தங்கள் நாட்டு அதிபர் ஆரோக்கியம் குறித்து மருந்துக்குக்கூட எந்த செய்தியும் ஒளிப்பரப்பாகவில்லை.
என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது.
-ஏழுமலை வெங்கடேசன்