சியோல்:

ஒரே வாரத்தில் 2-வது முறையாக, குறைந்த தொலைவு செல்லக்கூடிய 2 ஏவுகணை சோதனையை வியாழனன்று வடகொரியா நடத்தியது.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.

இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கை அதிகப்படுத்தி வந்தது.
இந்நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி, சிங்கப்பூரில் நடந்த ச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர்.

மேலும், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இதையொட்டி இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பிறகு, அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காதபோதும், ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.

கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ஆகியே தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இது தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை.
இதனால் இருதரப்பு உறவில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், வடகொரியாவின் வடக்கு பியாங்கன் பகுதியில் குறைந்த தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகள் வடகொரியா பரிசோதனை செய்தது.
இவை 270 மற்றும் 420 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் 2-வது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இது எத்தகைய ஏவுகணை என்பதற்கான முழு விவரம் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய வரும் சூழலில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.