சென்னை: 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என கிரெடாய் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கட்டுமானத் தொழில் சூடுபிடித்துள்ளனர். மேலும், ரியல் எஸ்டேட் (மனை வணிகம்) தொழில் மெள்ள வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தும் விதமாக இரண்டு நாள் மாநாடு, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பு நடத்துகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சி என்னும் தலைப்பிலான ‘STATECON 2021’ மாநாடு தனியார் ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினகராக கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ,தமிழ்நாடு கிரெடாய் அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டார். அதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என உறுதி கூறனார். தொடர்ந்து பேசியவர், 2031ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், சுமார் 9.53 லட்சம் மக்களுக்கு வீடு கட்டித் தரப்பட இருப்பதாகவும் கூறினார்.
“மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி, வருவாயில் 18.3 விழுக்காடு ஈட்டிக்கொடுக்கும் துறை கட்டுமான துறை. வேளாண் துறைக்குப் பிறகு அதிக பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கும் துறையாகக் கட்டுமான துறை உள்ளது. விரைவாகக் கட்டடங்கள் கட்டுவதற்கு மனைப் பிரிவுகளுக்கு ஒற்றைச்சாளர முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மாநில அரசுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வரை 5,973 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது, அதுபோல கடந்த ஆண்டைவிடக் கட்டுமான திட்டங்கள் 17 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது மாநில பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது.
தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, கட்டுமான தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. 4.4 மில்லியன் சதுர அடி குத்தகை நிலம் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். அரசும் தனியார் நிறுவனங்களும் மாநிலத்தின் வளர்ச்சி எனச் செயல்படும்போது மக்கள் பயன்பெறுவார்கள். பொருளாதார அளவில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. கட்டுமான தொழில் தொடர்பான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் மறுஆய்வு செய்யவும் அரசு தயாராக உள்ளது. மதுரை, ஓசூரு நகரங்களுக்குக் கூடிய விரைவில் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் விரைவாக அமைக்கப்படும்.
கட்டுமான திட்டங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்த 60 நாள்களில் ஒப்புதல் கிடைக்க வழிவகை செய்யப்படும். சென்னை நந்தம் பாக்கத்தில் அமையவுள்ள நிதி நகரத்தில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வர உள்ளன. 12 மண்டலங்களில் தற்போது கோவை, மதுரை, நீலகிரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நகர வளர்ச்சி குழுமத் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மதுரை, ஓசூரு பகுதிகளில் விரைவில் நகர வளர்ச்சித் திட்டக் குழுமப் பணிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
கட்டட வரைபட அனுமதிக்கான காலம் ஐந்து ஆண்டுகளிலிருந்து எட்டு ஆண்டாக அதிகரிக்கப்படுகிறது. மேலும், 2031ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 9.53 லட்சம் மக்களுக்கு வீடு கட்டித்தரப்படவுள்ளது. முதற்கட்டமாக 6.2 லட்சம் மக்களுக்கு 39.3 கோடி செலவில் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை நகருக்கான மூன்றாவது பெரும் திட்டம் தயாராகிக்கொண்டிருக்கிறது, பெருவெள்ளம் போக்குவரத்து நெரிசல் குடியிருப்பு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழைய கட்டங்கள் இடித்துவிட்டு நவீன தொழில்நுட்பத்துடன் தனியாருடன் இணைந்து புதிய கட்டங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் தொகை அடிப்படையில் அனைவரின் தேவைகளையும் அரசால் பூர்த்தி செய்துவிட முடியாது. வறுமை இருக்கும் நாட்டில் வளர்ச்சியைப் பற்றி மட்டும் பேச முடியாது. குடிசைகள் இருக்கும்வரை கோபுரங்களின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருக்க முடியாது. கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வீடு வாங்கும் கனவை நனவாக்கித் தர வேண்டும். வீட்டின் அளவு சிறியதாக இருந்தாலும் அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாட்டு தொடக்க விழா நிகழ்வில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ். முத்துசாமி, தமிழ்நாடு கிரடாய் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, தமிழ்நாடு அரசின் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் பங்கேற்றனர்.