மும்பை
ஏகே 47 குண்டுகள் சோதனையில் தோல்வியுற்ற குண்டு துளைக்காத அங்கிகளை மகாராஷ்டிரா காவல் துறை உற்பத்தியாளருக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலின் போது குண்டு துளைக்காத அங்கி அணிந்திருந்த காவல்துறை அதிகார் ஹேமந்த் கர்கரே குண்டடி பட்டு மரணம் அடைந்தது அப்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து அரசு புதியதாக 5000 குண்டு துளைக்காத அங்கிகளை வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்கியது.
இதற்காக ரூ. 17 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சுங்கத் தீர்வை மற்றும் உள்ள வரிகள் போக அந்தப் பணத்துக்கு 4600 அங்கிகள் மட்டுமே வாங்கப்பட்டது. வாங்கிய அங்கிகள் சண்டிகரிலுள்ள சோதனை நிலையத்தில் சோதிக்கப்பட்டது. ஏகே 47 துப்பாக்கி குண்டுகளை செலுத்தி அந்த அங்கிகள் சோதிக்கப் பட்ட போது அதில் 3000 அங்கிகள் மட்டுமே சோதனையில் முழுமையாக தேறி உள்ளது. 1430 அங்கிகள் குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளன. அந்த அங்கிகள் தற்போது உற்பத்தியாளருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “நாங்கள் இந்த அங்கிகளுக்கு பதிலாக புதிய 1430 அங்கிகள் முழுவதுமாக சோதிக்கப்பட்ட பின் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். நாங்கள் இந்த குண்டு துளைக்காத அங்கிகளின் தரத்தில் எந்த ஒரு சமாதானமும் செய்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் பரிசோதித்து அனுப்பினாலும் புதிதாக வரும் அங்கிகள் மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கப்படும்” எனக் கூறி உள்ளார்.