பெங்களூரு: மத்திய பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கும் வகையில், அடுத்த ஆண்டு ( 2024 ஆம் ஆண்டு) நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த காங்கிரஸ் உள்பட பல மாநில அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதிலும் பாஜகவை வெற்றிகொள்ள எரிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளன.
இதைத்தொடர்ந்து. பிகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் 23ந்தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து 2வது கட்ட கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில், பெங்களூருவில் வரும் 13, 14ந்தேதி (ஜூலை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்j நிலையில், பெங்களூருவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா அரசியிலில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸிலிருந்து பிரிந்து, ஆளும் பாஜக – ஷிண்டே கூட்டணிக்கு ஆதரவு அளித்தார் அஜித் பவார். துணை முதலமைச்ச ராக அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்ட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக, பெங்களூருவில் நடைபெற இருந்த 2வது கட்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் சரத் பவார் முக்கிய பங்கு வகித்து வந்த நிலையில், அவரது கட்சியே இரண்டாக உடைந்துள்ளது. பவார் கட்சி இரண்டாக உடைக்கப்பட்டிருப்பது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியை சரி செய்யும் பணியில் சரத்பவார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.