டில்லி:
நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு காரணமாக ரிலையன்ஸ் நிறுவனர் அனில் அம்பானி 30ஆயிரம் கோடி திருட ஏதுவாக கதவை திறந்து வைத்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் அதிரடியாக குற்றம் சாட்டி டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
ர`பேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான பிரத்யேக கட்டுரை மற்றும் ஆதாரங்கள் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்து உள்ளது. விமானங்களின் விலை விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தனியாக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ரஃபேல் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யும் விதிகளில் திருத்தங்கள் செய் யப்படதாகவும், ஊழல் தடுப்பு குறித்த விதி, எஸ்க்ரோ சிறப்பு வங்கிகணக்கு மூலம் பணத்தை செலுத்துவது உள்ளிட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளாகவும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரண்டு வாரத்துக்கு முன்னதாக, ப்ரென்ச் பாதுகாப்புத் துறை அமைச்சரை அனில் அம்பானி சந்தித்தார். அதற்கு இரண்டு வாரங்கள் கழித்துத்தான் ஒப்பந்தம் மோடியால் அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு டிவிட் போட்டுள்ளார்.
அதில், நாட்டின் காவலாளி என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, இந்திய விமானப் படைக்கு சொந்தமான ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி எடுத்து செல்லும் வகையில் பிரதமர் மோடி கதவை திறந்து வைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.