கொல்கத்தா:

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய எதிர்கட்சிகள் பங்கேற்ற மகா கூட்டணி பேரணியில், இஸ்லாமியர்களுக்கும், உருது மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்ததாக, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளை திரிணாமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

 

இஸ்லாமியர்கள் மீது நம்பிக்கை இருப்பதாக மம்தா பானர்ஜி பேசியதாக தொலைக்காட்சி க்ளிப்பிங்கை இணைத்து கவுரவ் பிரதான் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் எதிர்கட்சித் தலைவர்கள் கையில் ஏந்திய பதாகைகளிலும் மேடையிலும் உருது மொழியையே முதன்மைப் படுத்தியிருந்ததாக பலரும் பதிவிட்டிருந்தனர்.

இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் தமது முகநூல் பக்கத்தில், பேரணியில் மம்தா பேசிய முழு காணொலிக் காட்சியை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியைப் போலவே, தகவலை உறுதிப் படுத்தாமல் இத்தகைய பதிவைப் போடுகின்றனர் என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியது.
“இந்துக்கள் என்றால் தியாகம் என்று அர்த்தம், இஸ்லாமியர்கள் என்றால் நம்பிக்கை என்று அர்த்தம், கிறிஸ்தவர்கள் என்றால் அன்பு என்று அர்த்தம், சீக்கியர்கள் என்றால் கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்பவர் என்று அர்த்தம்…”

இப்படித்தான் மம்தா பானர்ஜி பேசினார்.

ஆனால், மற்றவற்றை எடுத்துவிட்டு, வேண்டுமென்றே ஒரு வரியை மட்டும் பதிவிட்டுள்ளனர். இந்த பேரணியில் உருது மொழி மட்டும் இடம்பெறவில்லை. இந்தி, ஆங்கிலமும் இடம்பெற்றது. ஆனால், சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் வேண்டுமென்றே உருது மொழியை மட்டும் முன்னிலைப் படுத்தி ஒளிபரப்பப்பட்டது.

மோடி மீண்டும் பிரதமராக வராவிட்டால், நம்மைச் சுற்றிலும் இருக்கும் கடைகளின் பலகைகளில் உருது மொழிதான் இடம் பெறும் என்று திட்டமிட்டே ஒரு பொய்யை கூறிவருகின்றனர். மம்தாவின் பேச்சை முழுமையாக கேட்டாலே உண்மை புரியும் என்று பதிவிட்டுள்ளனர்.