கொடைக்கானல் மன்னவனூர் ஏரி வறண்டதால் சுற்றுச்சூழல் பூங்கா இன்று காலை முதல் மூடப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் மேல் மலைப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் பூங்காவில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பரிசல் படகு சவாரி சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. போதிய மழை இல்லாத காரணத்தினால் தற்போது இந்த ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த ஏரியில் பரிசல் படகு சவாரி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தக்கூடிய அடிப்படை தேவையான கழிப்பறையை பயன்படுத்த கூட தண்ணீர் இல்லை. இதனால் நேற்று முதல் இந்த சுற்றுச்சூழல் பூங்கா மூடப்படுகிறது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மன்னவனூர் வனத்துறை ரேஞ்சர் ஞான பாலமுருகன், “போதிய மழை இல்லாத காரணத்தினால் மன்னவனூர் ஏரி வறண்டு விட்டது. இந்த சுற்றுச்சூழல் பூங்காவில் முக்கியமானது பரிசல் படகு சவாரி தான். தண்ணீர் இல்லாத காரணத்தினால் பரிசல் படகு சவாரி நிறுத்தப்பட்டுவிட்டது. அதுபோலவே கழிப்பறைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட வன அலுவலரின் உத்தரவுப்படி மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

எனவே சுற்றுலா பயணிகள் மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்கா திறக்கும் வரை வர வேண்டாம். மழை பெய்தவுடன் போதிய நீர் கிடைத்தவுடன் பரிசல் படகு சவாரி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதன் பின்னர் இந்த பூங்கா திறக்கப்படும். அதுவரை சுற்றுலாப் பயணிகள் யாரும் மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வந்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்” என்று தெரிவித்தார்.