சென்னை: நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல் இல்லை! தமிழகஅரசு ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்துள்ளது.  நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதில்,  “இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு 2022ம் ஆண்டு  ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தததாக சமீபத்தில் அறிவித்தார் விக்னேஷ் சிவன். இது தொடர்பான புகைப்படத்தையும் இரண்டு பேரும் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றது தெரிய வந்தது.  ஆனால் வாடகை தாய்மூலம் குழந்தை பெற வேண்டுமானால், திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆக வேண்டும். அதனால், இவர்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, வாடகை தாய் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து, அத்துடன் 3 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல் இல்லை! தமிழகஅரசு ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்துள்ளது.  நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த  2016ம் ஆண்டே பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. அதை உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.இச்செய்தியை தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது. அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் நேரடி விசாரணை இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அச்சிகிச்சை தொடர்பான விசாரணையில் கீழ்காணும் ஆய்வு குறிப்புகள் அறிவிக்கப்படுகிறது.

இவ்விசாரணையில் இத்தம்பதியர்கள் மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிய வந்தது.

ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாடகைத் தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இத்தம்பதியருக்கு பதிவு திருமணம் 11.03.2016-இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்காணும் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச் சான்று விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை.

ஆகஸ்ட் 2020 மாதத்தில் சினைமுட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது.

மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கபட்டுள்ளாதாக தெரிய வருகிறது.

செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைதாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது.

விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் 09.10.2022 அன்று தம்பதியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் கீழ்கண்ட குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது.

ஐசிஎம்ஆர் வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை.எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது