பனாஜி
வரும் 2019 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்பதால் 2019ல் பிரதமர் வேலை காலி இல்லை என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதால், பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு அணி உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சிவசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி முறிவு பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கோவாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மோடிக்கு எதிரான அணி ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளன. அந்த அணியில் சுமார் இரு டஜனுக்கும் அதிகமான பேர் பிரதமர் கனவில் உள்ளனர். ஆனால் அவர்களால் ஒரு நிலையான ஆட்சி அமைக்க முடியாது. மக்கள் மோடியின் அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை ஆதரிக்கின்றனர். எனவே பாஜக அணி வெற்றி பெறுவது நிச்சயம்.
அதனால் நான் அந்த பிரதமர் கனவில் இருப்பவர்களுக்கு தெரிவிப்பது எல்லாம் வரும் 2019ல் பிரதமர் வேலை காலி இல்லை என்பதாகும். பிரதமர் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் சர்ஜிகல் ஸ்டிரைக் என்னும் ராணுவ நடவடிக்கை வரை அனைத்தும் மக்கள் இடையே ஒரு தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. மோடிக்கு எதிராக எந்த அணி அமைந்தாலும் அந்த அணியால் ஒரு நிலையான ஆட்சியை அளிக்க முடியாது என மக்கள் அறிவார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக எந்த ஒரு மதக்கலவரமும் இல்லை. சிறுபான்மையினர் இப்போது நலமாக பாதுகாப்பாக உள்ளனர். ஏதோ ஒரு சில நிகழ்வுகள் எங்கோ நடப்பதை எதிர் அணிகள் பூதாகாரமாக்குகின்றன. இவ்வாறு சிறுபான்மையினரை பயமுறுத்துவோர் விரைவில் சிறைக்கு அனுப்பப் படுவார்கள். கடந்த காலத்தில் சிறுபான்மையினப் பெண்கள் சுமார் 70% பேர் பள்ளி நிலையில் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் அது வெகுவாக குறைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.