மீரட்
தான் வளர்க்கும் பசுவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வாகன ஓட்டிகள் மறுப்பதாக ஒர் உத்திரப் பிரதேசப் பெண் கூறி உள்ளார்.
பா ஜ க ஆளும் உத்திரப் பிரதேசத்தில் பசு காவலர்கள் சமீபகாலமாக பசுக்களை ஏற்றிச் செல்லும் வாகன் ஓட்டிகளை தாக்கி வருகின்றனர். இதனால் பல பால் பண்ணை உரிமையாளர்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய பசுக்களை பண்ணைக்கு ஏற்றிச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் அடிபட்ட தனது பசுவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வாகனம் கிடைக்காமல் ஒரு பெண் அவதியுறுகிறார். அவரைப் பற்றிய செய்தி இதோ:
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுப் பெண் ஜோதி சிங் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். அவர் ஆர்கானிக் விவசாயத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் பணியை விட்டு விட்டு மீரட் அருகில் உள்ள புலந்தஷார் கிராமத்தில் ஒரு சிறு பண்ணை நடத்தி வருகிறார். இவர் அன்புடன் மோனி என்னும் பெயரில் பசு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தப் பசு ஒரு முறை தவறி விழுந்ததில் காலில் அடிபட்டது. அதன் பின் நிற்கவும் முடியாமல் தவித்து வருகிறது.
உள்ளூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பசுவின் உடல்நிலை தேறவில்லை. அந்தப் பசுவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் கருதுகின்றனர். அதற்கு எக்ஸ் ரே எடுக்க பரேலியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வசதிகள் உள்ளதால் அங்கு பசுவை எடுத்துச் செல்லவேண்டும் என கூறி உள்ளனர். ஜோதி சிங் என்ன முயன்றும் எந்த ஒரு வாகன ஓட்டியும் பசுவை தங்கள் வாகனத்தில் கொண்டு செல்ல முடியாது என மறுத்து விட்டனர்.
இது குறித்து ஜோதி உள்ளூர் அரசு அதிகாரிகள் மூலம் முயன்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பிறகு டிவிட்டர் மற்றும் ஈ மெயில் மூலம் பிரதமர் மோடி, உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு 114 முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். எதற்கும் பதில் இல்லை. ஜோதி, “கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மோனிக்கு அடி பட்டது. தற்போது உணவு உண்ணவும் முடியாமல் உள்ளது. இந்த அரசியல்வாதிகள் பசுவின் மேல் பாசம் வைப்பது வெறும் அரசியலுக்காக மட்டுமே. இப்படியே போனால் என் பசு இறந்து விடும். உடனடியாக அரசு தலையிட்டு மோனியின் உயிரைக் காக்க வேண்டும்” என கண்ணீருடன் கூறி உள்ளார்.