லக்னோ: மலிவான அரசியலுக்கான நேரம் இதுவல்ல என்று உ.பி. முதல்வரையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து உள்ளார் காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாக அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ஆனால், அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு காங்கிரஸ் கட்சியின் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
பாஜக அரசியல் செய்வதாக காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். இதனையடுத்தே காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளின் விவரங்களை தருமாறு அரசு கேட்டது. பின்னர் காங்கிரஸ் சார்ப்பில் பேருந்துகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசிடம் கொடுக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று முகநூல் பக்கம் மூலம் பேசிய பிரியங்கா காந்தி, இப்போது அரசியலுக்கான நேரம் இதுவல்ல என்று பாஜகவை கடுமையாக சாடினார். அவர் மேலும் தமது உரையில் கூறி இருப்பதாவது:
கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகளை மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. யோகி ஆதித்யநாத் அரசாங்கம் வாகனங்களின் ஆவணங்களைத் தயாரிக்க வலியுறுத்தியது.
தகவல்தொடர்புகளில் நேரத்தை வீணடிப்பதன் மூலம் இந்த முயற்சியை தாமதப்படுத்தியது. இந்த பேருந்துகளை இயக்க நீங்கள் அனுமதித்திருந்தால், 72,000 பேர் இப்போது வீட்டிற்கு வந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலில் ஈடுபட்டனர்.
பேருந்துகள் நேற்று முதல் ராஜஸ்தான்-உத்தரபிரதேச எல்லையில் நின்று கொண்டிருந்தன. இந்த அரசாங்கம் எந்த உதவியையும் செய்யவில்லை. காங்கிரஸ் ஒரு நேர்மையான வழியில் உதவ விரும்புகிறது, அரசியலில் ஈடுபட விரும்பவில்லை.
இந்த பேருந்துகள் உத்தரபிரதேசத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது அரசியல் விளையாடுவதற்கான நேரம் அல்ல, அனைத்து கட்சிகளும் அரசியலை ஒதுக்கி வைத்து மக்களுக்கு உதவ வேண்டும்.
உ.பி. அரசாங்கம் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. அரசியல் வேறுபாடுகளை நீக்கி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு இருக்கும்போது, எல்லா இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் ஆதித்யநாத் ஆகியோர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறது என்று குற்றம்சாட்டினார்.