டில்லி,

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இந்த பதிலை கூறி உள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.  இந்த வங்கிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிப்பதுடன், வருமான வரியை ரத்து செய்வது உள்ளிட்ட சில சலுகைகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து ஜேட்லி  கூறியதாவது:

“கூட்டுறவு வங்கிகளும், மற்ற வர்த்தக வங்கிகளைப் போலதான் செயல்படுகின்றன. எனவே அவற்றை தனிமைப்படுத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற வங்கிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் இந்த வங்கிகளுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மற்ற பல வர்த்தக வங்கிகளைப் போலவே, கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர் அல்லாத பொதுமக்களுக்கும் கூட்டுறவு வங்கிகள் சேவை புரிகின்றன. எனவே,  கூட்டுறவு வங்கிகளை, கூட்டுறவு அமைப்புகளை போல கருத முடியாது.

எனவே லாபம் ஈட்டும் கூட்டுறவு வங்கிகள் அதற்கு ஏற்ற வகையில் வருமான வரி செலுத்துவது அவசியம். அதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.