பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பில், பாரதீய ஜனதா அரசுக்கு மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவளிக்கப் போவதாக வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி.
குமாரசாமி அரசு கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்த நிலையில், அடுத்த 2 நாட்களில் 105 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் காட்டி முதல்வராக பதவியேற்றார் பாரதீய ஜனதாவின் எடியூரப்பா.
அவர் அடுத்த 1 வாரத்தில் சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் வாஜுபாய் வாலா உத்தரவிட்டிருந்தார். கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை 113. எனவே, பெரும்பான்மைக்கு இன்னும் 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில், பதவியை இழந்த குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதீய ஜனதாவை ஆதரிக்கும் என்று திடீரென செய்திகள் பரவின. ஆனால், இச்செய்திகளை குமாரசாமி கடுமையாக மறுத்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “பாரதீய ஜனதாவுக்கு நான் ஆதரவளிக்கப்போவதாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவற்றுக்கும் உண்மைக்கு எந்த சம்பந்தமுமில்லை. மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கட்சியை வலுப்படுத்துவோம். எனவே, தேவையற்ற செய்திகளை நம்பி கட்சித் தொண்டர்கள் பதற்றம் அடைய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.