வாரனாசி:
உ.பி. மாநிலம் வாரனாசியில் உள்ள மாநில பல்லைக்கழகமான மகாத்மா காந்தி காசி வித்யாபீட தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஆர்எஸ்எஸ்.ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி பெறவில்லை.
சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அணியான சமாஜ்வாடி சத்ர சபா (எஸ்சிஎஸ்) சார்பில் போட்டியிட்டவர்கள் துணைத் தலைவர் மற்றும் நூலக செயலாளர் பதவிகளில் வெற்றி பெற்றுள்ளனர். தலைவர் பதவியை சுயேட்சையாக போட்டியிட்ட ராகுல் துபேவிடம் சமாஜ்வாடி சத்ர சபா இழந்துள்ளது.
இந்த ஆண்டு பொது வேட்பாளர்களை சமாஜ்வாடி சத்ர சபா மற்றும் காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணியான என்எஸ்யுஐ ஆகியவை ஆதரித்திருந்தது. ஏபிவிபி கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு பதவியான பொதுச் செயலாளர் பதவியை கூட இந்த ஆண்டு தக்கவைத்துக் கொள்ளவில்லை.
தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற ராகுல் துபே 2,365 வாக்குகள் பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் வால்மீகி உபத்யாய் 1,398 வாக்குகள் பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு என்எஸ்யுஐ மற்றும் எஸ்சிஎஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ரோஷன்குமார் 3,185 வாக்குகள் பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் தயா சங்கர் யாதவ் 1,458 வாக்குகள் பெற்றார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் அனில்யாதவ் 2,842 வாக்குகள் பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் அன்கிதா சிங் 1,690 வாக்குகள் பெற்றார். நூலகர் செயலாளர் பதவிக்கு என்எஸ்யுஐ மற்றும் எஸ்சிஎஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ரவி பிரதாப் சிங் 2,084 வாக்குகள் பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் சர்வேஷ் பதாக் 631 வாக்குகள் பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது என்எஸ்யுஐ, எஸ்சிஎஸ் ஆதரவாளர்களுக்கும் ஏபிவிபி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.