லக்னோ: நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கலவரம்கூட நடைபெறவில்லை என அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஆனால், உண்மையான புள்ளி விபரங்களின்படி, இந்த தகவல் தவறானது என்று மறுப்பு வெளிவந்துள்ளது. பா.ஜ.க. உத்திரப்பிரதேசத்தில், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்தது.
யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது, “2012ம் ஆண்டில் 227 கலவரங்களும், 2013ம் ஆண்டில் 247 கலவரங்களும், 2014ம் ஆண்டில் 242 கலவரங்களும், 2015ம் ஆண்டில் 219 கலவரங்களும், 2016ம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட கலவரங்களும் நடந்துள்ளதாய் பதிவாகியுள்ளன.
இந்தக் கலவரங்களின் விளைவாக, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், ஏராளமான கோடி சொத்துக்களும் சேதமாகியுள்ளன. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில், 1 கலவரம்கூட ஏற்படவில்லை என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றுள்ளார்.
ஆனால், அவர் அளித்த விபரங்கள் தவறு என்று ஆதாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டில், 195 கலவரங்கள் நிகழ்ந்துள்ளன என்று உத்திரப்பிரதேச அரசின் சார்பில், மக்களவைக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில் பதிவாகியுள்ளது.
மேலும், கடந்தாண்டுகளின் கலவரங்களைப் பற்றி யோகி கூறிய தகவல்களில், 2013ம் ஆண்டின் கலவர எண்ணிக்கை மட்டுமே சரியானது என்றும் கூறப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி