சென்னை:

நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்  கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

ன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக எச்.வசந்தகுமார் தேர்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த நாங்குனேரி தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், விரைவில், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 6ந்தேதி (செப்டம்பர்) அங்கு நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த  லோக்சபா தேர்தல் உடன்பாடு காரணமாக, நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிடும் என திமுகவினர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று தீர்மானம் நிறைவேற்றியது கூட்டணி கட்சியான திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும், திமுக காங்கிரஸ் இடையே லடாய் என்று தவல்களும் ரெக்கைக்கட்டி பறந்தன. இந்த நிலையில்,  நாங்குனேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வில்லை – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறி உள்ளார்.