சென்னை: திருச்சி பாஜக பிரமுகர் கொலைக்கு இதுவரைக்கும் நடந்த விசாரணையில் மதம் காரணமல்ல என்பது தெரிய வந்துள்ளதாக மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் கூறி உள்ளார்.
பாஜக திருச்சி மண்டலத் துணைத் தலைவராக உள்ள விஜயரகு என்பவர் காந்தி மார்கெட் பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பதற்றம் நிலவியது. முஸ்லீம் தீவிரவாதிகள் தான் இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகின.
இந் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் கொலைக்கு இது வரைக்கும் நடந்த விசாரணையில் மதம் காரணமல்ல என்று மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஒருவர் மட்டுமே இந்த கொலையை செய்ய வில்லை. ஒரே மதத்தை சேர்ந்தவர்களால் கொலை நடத்தப்பட வில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம். விரைவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பிடிபடுவார்கள், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக விஜயரகு மகளுக்கும், அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் மிட்டாய் பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட விஜயரகு ஆத்திரம் அடைந்து மிட்டாய் பாபுவை மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதனால் ஏற்கனவே 2 முறை விஜயரகு மீது கொலை முயற்சி நடைபெற்று உள்ளது. காந்தி சந்தை காவல் நிலையத்திலும் பாபு மீது புகார் அளித்து விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மிட்டாய் பாபு அண்மையில் பிணையில் வந்துள்ளார். இந்த பகையை வைத்தே இன்றைய தினம் அதிகாலை தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்திருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.