சென்னை: அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த சபாநாயகர் அப்பாவு,  தன்மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் தனக்கு கடுகளவுவட வருத்தமில்லை என கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அதுகுறித்த விவாதம்  நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவித்து பேசினார்.

முன்னதாக,  தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டப்பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தி வருகிறார். அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.

விவாதங்கள் முடிவடைந்த பிறகு, துணை சபாநாயகர் பிச்சாண்டி,   குரல் வாக்கெடுப்பு  நடத்தினார். இதில், சபாநாயகர் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, டிவிஷன் வாக்கெடுப்பு நடத்ததப்பட்டது.  இதனால் பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், அமோக ஆதரவுடன் சபாநாயகர் அப்பாவு வெற்றி பெற்றார். அவர்மீதான அதிமுக தீர்மானம் தோல்வி அடைந்தது. அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவை. அதிமுக உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தீர்மானம் தோல்வி அடைவது உறுதி என  தெரிந்தே அதிமுக இந்த தீர்மானத்தை கொண்டு வந்து தங்களது கருத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில்,வாக்கெடுப்பில்,  அப்பாவு மீதான  நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும் ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர். இதனால் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.  இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓபிஎஸ் தரப்பு மற்றும் செங்கோட்டையன் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடதக்கது.

தீர்மானத்தை எதிர்ப்போர் அதிகமாக இருந்ததால் ஆர்.பி. உதயகுமார் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியுற்றதாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்jர். இதனால் அப்பாவு சபாநாயகராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த அப்பாவு, தீர்மானம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். தீர்மானத்தின்மீது பேசிய “எதிர்க்கட்சி தலைவர் உட்பட தோழமை கட்சி தலைவர்கள் பேசிய அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.

ஒருசில தவறுகள் நடந்திருந்தாலும் கூட என்னை நானே திருத்தியிருப்பேன் அல்லது முதலமைச்சரால் திருத்தப்பட்டிருப்பேன்.

எதிர்க்கட்சி தலைவர் வைத்திருக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எதை சொன்னாலும் ஆத்திரத்தோடோ, எரிச்சலோடோ முதலமைச்சர் இதுவரை பார்த்ததில்லை. எதிர்க்கட்சியினருக்கு அதிகளவு பேச வாய்ப்பு அளித்தது குறித்து முதலமைச்சர் அவரது சார்பாக என்னிடம் இதுவரை பேசவில்லை.

இதன் மூலம் ஜனநாயகம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு ஒரே நாளில் இரண்டு மூன்று மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.

அதிமுக ஆட்சியில் இருந்த போது 30க்கும் மேற்பட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகளை ஒரே நாளில் நடத்தியதும் நினைவு கூறுகிறேன். ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்திருப்பதை அமைச்சர்கள் கூட பேரவையில் பதிவு செய்துள்ளனர்.

இந்த தீர்மானம் இங்கே விவாதிக்கப்பட்டது எனக்கு எள் முனையளவும் வருத்தம் இல்லை. இந்த கருத்து நான் கடந்து வந்த நான்காண்டு காலத்தில் அதிமுகவினுடைய வாதங்களில் தெளிவாக புரிந்து கொண்டது. அவர்களும் என் பணியை பாராட்டியுள்ளதாகவே எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு என்பது படிப்படியாக நடந்து கொண்டிருக்கிறது

இவ்வாறு கூறினார்.