பெங்களூரு:
கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலை யில், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், நாங்கள் சட்டமன்றத்துக்கு போக மாட்டோம் என்றும், எங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் அடம் பிடித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக ஆளும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டால் கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட முடியாது. அதே வேளையில், கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள்மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாய்ந்து, தகுதி இழக்க நேரிடும் என்பதால், சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம், தங்களது ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் பிடிவாதமாகக் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் சார்பில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பி.சி.பாட்டீல் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்த முடிவெடுத்தாலும் சேர்ந்தே எடுப்போம். என்ன நடந்தாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்றத்திற்கு போகும் பேச்சுக்கே இடமில்லை’ என்று தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.