புதுடெல்லி: மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் நடைமுறை பின்பற்றப்படாது என்று அறிவித்துள்ளார் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் எஸ்.பூரி.
உள்நாட்டு நகரங்களுக்கு இடையில் மற்றும் மாநிலங்களுக்கு இடையில் சாலைகள் மற்றும் ரயில் மூலமாக பயணம் செய்வோருக்கு தனிமைப்படுத்தல் நடைமுறையில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“வெளிநாட்டிலிருந்து திரும்புவோருக்கு தனிமைப்படுத்தல் விதி அமலில் உள்ளது. அதேநேரத்தில், உள்நாட்டுப் பயணிக்குத் தேவையில்லை” என்றுள்ளார் அமைச்சர்.
“ஒருவர் உள்நாட்டில் ஓர் இடத்தை அடைந்து, அங்கு 14 நாட்கள் தனிமையில் இருந்து, பின்னர் சொந்த ஊர் திரும்பி, அப்போதும் 14 நாட்கள் தனித்திருப்பது சாத்தியமற்றது” என்றுள்ளார் அவர்.
அதேசமயத்தில், விமானப் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளதோடு, அதை பயணிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.