இரண்டு டோஸ் முழுமையாக கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் இனி தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற தனது முந்தயை அறிவிப்பை பிரிட்டிஷ் அரசு விலக்கிகொண்டது.
கோவிஷீல்டு தடுப்பூசி அல்லது பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு தடுப்பூசியை முழுமையாக (இரண்டு டோஸ்) போட்டுக் கொண்டவர்கள் வரும் அக்டோபர் 11 முதல் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடு இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வரும் திங்கட்கிழமை முதல் சுற்றுலா மற்றும் தொழில் முறையாக இங்கிலாந்து செல்லும் இந்தியர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்காது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருந்தபோதும் கோவாக்ஸின் தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்துள்ளதா என்பது குறித்து அவரது செய்தியில் விளக்கமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.