சென்னை:

சென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும்  13 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்களுக்கு கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தமிழகஅரசின் பொய்புரட்டுகளை அம்பலப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் உள்ளது. நேற்று  ஒரே நாளில்  3509 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 70,977 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல கொரோனாவால் 911 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மாநில தலைநகர் சென்னையில் நேற்று மட்டும்  (25ந்தேதி) ஒரே நாளில்  1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல சென்னையில் இதுவரை  694 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தினமும் செய்திகளை பரப்பி வருகின்றன. ஆனால்,   கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இதனிடையே சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் எனப் பலருக்கும் கொரோனா பரவி வருவதால், அவர்களுக்குத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2 நாட்களில் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் பணிபுரியும் 10 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு  தேவையான முழு உடல் கவசம், முக கவசம், கை உறை, கிருமி நாசினிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல முறை அவர்கள் அரசுக்கு அறிவுறுத்தியும், இன்னும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதை சமத்துவ மருத்துவர்கள் சங்கமும் சுட்டிக்காட்டியிருந்தது.

ஆனால், தமிழகஅரசு, தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக தொடர்ந்து கிளிப்பிள்ளை போல கீச்சிட்டு வருகிறது. ஆனால், எந்த பாதுகாப்பு வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என்பது அவ்வப்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மரணம் உறுதி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 10 செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,   13 பயிற்சி மருத்துவர்களுக்கு நோய் தொற்று பரவியிருப்பது உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களுக்கு பணியின்போது, தேவையான கவச உடைகள் வழங்காததாலேயே அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும், வெறும் முகக்கவசங்கள் மட்டுமே அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளதாகவும்,  அவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழகஅரசின் பொய் அம்பலமாகி உள்ளது.