சபரிமலை

ஒகி புயலால் சபரிமலை யாத்திரைக்கு பாதிப்பு எதுவும் இல்லை என திருவிதாங்கூர் தேவச வாரியம் தெரிவித்துள்ளது.

ஒகி புயல் லட்சத்தீவை நோக்கி நகர்ந்ததால் கேரளா முழுவதும் கடும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.  இதனால் சபரிமலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் இருநாட்களுக்கு பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் வாட்ஸ்அப் மூலம் பல செய்திகள் வந்துக் கொண்டு இருக்கின்றன.  பக்தர்கள் பலர் வார இறுதி என்பதால் தற்போது சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த செய்திகளை நம்ப வேண்டாம் என சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவச வாரியம் கூறி உள்ளது.   இது தொடர்பாக வாரியத் தலைவர் பத்மகுமார், “சபரிமலை பகுதிக்கு புயலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  தவறான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம்.  கோயிலுக்கு பக்தர்கள் தாராளமாக வரலாம்.  நேற்றும் அதற்கு முன் தினமும் வழக்கம் போல பூஜைகள் நடைபெற்றன.  இன்று தரிசனம் தொடரப் படும்” என அறிவித்துள்ளார்.