டெல்லி: அரசியல் கட்சிகள் இலவச திட்டங்கள் அறிவிப்பதை தடுக்க முடியாது; இலவச அறிவிப்புக்களை ஏற்பதும், நிராகரிப்பதும் வாக்காளர் களின் முடிவுக்கு உட்பட்டது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இலவசங்கள் அறிவிக்கும் கட்சிகளின் தேர்தல் சின்னங்களை கைப்பற்றவும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் ‘பகுத்தறிவற்ற நடவடிக்கைகள்’ என சாடியது. மேலும் இதுபோன்ற இலவச அறிவிப்புகள்  பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. வாக்குறுதிகள் எப்போதும் வாக்குறுதிகளாகவே இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை, இலவசங்களைத் தவிர, நடைமுறைப்படுத்தப்படவில்லை.  இலவசங்களை வழங்குவது லஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கிற்கு சமம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து கேள்வி எழுப்பிய தலைமைநீதிபதி,  “இது ஒரு தீவிரமான பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இலவசங்களுக்கான பட்ஜெட் வழக்கமான பட்ஜெட்டைத் தாண்டியதாகத் தெரிகிறது…சில சமயங்களில் இது சில கட்சிகளுக்கு சமமாக இருக்காது… இதை எப்படி நிர்வகிக்கலாம் அல்லது கட்டுப்படுத்துவது?” என கேள்வி எழுப்பியவர்,  இப்போது எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ள மத்தியஅரசு  மற்றும் ECI க்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்யப்பட்டது.  அதில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக இலவசங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செயல்படுத்துவது என்பது அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகளின் கொள்கை முடிவு. அதில் தலையிட இயலாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. தேர்தலுக்கு முன் இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாமும் எங்களுக்கு இல்லை என  தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில்

அரசியல் கட்சிகளின் கொள்கை , முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிப்பது குற்றமாகாது என்பதை 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.