சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி அமைக்கப் பட்டு வருகிறது என்றும், இது கொள்கை அடிப்படையிலான கூட்டணி இல்லை என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை தெரிவித்து உள்ளார்.
இதுவரை பாஜக கூட்டணியை கடுமையாக சாடி வந்த தம்பித்துரை, தற்போது தனது முடிவில் இருந்து பின்வாங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், இன்று முதன்முதலாக அதிமுக பாமக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் போடப்பட்டது.
ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், மேலும் சில கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
அதுபோல திமுக காங்கிரஸ் கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக அதிமுக பாஜக கூட்டணியை கடுமை யாக சாடி வந்த அதிமுக எம்.பி.யும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை, பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார். சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் குறித்த விவாதத்தின்போது, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
தம்பிதுரையின் பேச்சு, அதிமுக பாஜக உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தம்பிதுரையின் பேச்சை ஒரு பொருட்டாக கருதாத அதிமுக தலைமை, பாஜகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையை சமூகமாக நடத்தி வந்தது.
அதுபோல, கரூர் தொகுதி போட்டியிட விருப்பம் தெரிவித்து அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை மனு செய்து மேலும் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதன் காரணமாக தனக்கு மீண்டும் கரூர் பாராளுமன்ற தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்று புலம்பி வந்த தம்பித்துரை , தற்போது, தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியளார்களை சந்தித்த தம்பித்துரை, அதிமுக பாமக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, அதிமுக ஏற்படுத்தியுள்ள கூட்டணி என்பது, கொள்கை அடிப்படையில் கூட்டணி இல்லை என்றவர், மக்களவை தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.