கரூர்: திமுகவில் உண்மைக்கும், உழைப்புக்கும் இடமில்லை என கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறினார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இன்று 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் பிரசாரம் செய்கிறார்.  கரூரில், அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது  திமுகவைசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கரூர் சின்னச்சாமி அதிமுகவில் இணைந்தார்.  அப்போது உரையாற்றிய முதல்வர்,  திமுகவில் உண்மைக்கும், உழைப்புக்கும் இடமில்லை என  விமர்சித்தார்.  முன்னாள் அமைச்சரான சின்னசாமி தாய் கழகத்தில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய முதல்வர், ஸ்டாலினால் கனவு தான் காண முடியும், முதல்வராக முடியாது எனக் கூறினார்.

மேலும், தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஏமாற்றுவதில் வல்லவர் எனவும் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து, பரமத்தி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, செம்பட்டி, திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கவுள்ளார்.