நாமக்கல்

திமுக சார்பில் நாமக்கல் நகராட்சியில் வென்ற ஒரே அதிமுக பெண் உறுப்பினர் திமுகவில் இணைந்துள்ளதால் எதிர்க்கட்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது..

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 22 மற்றும் 25-வது வார்டுகளில் திமுக ஆதரவு பெற்ற சுயேச்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த மாதம் 19 ஆம் தேதி மீதமுள்ள 37 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 36 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது.

எனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இரு உறுப்பினர்களுடன் திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 38 ஆக இருந்தது.   தேர்தலில் கொசவம்பட்டி 29-வது வார்டில் மட்டும் அதிமுக-வைச் சேர்ந்த ரோஜாரமணி வெற்றி பெற்றார்.

நேற்று முன்தினம் நாமக்கல் நகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு முன்னர் நாமக்கல் அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் ரோஜாரமணி, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்பி, எம்எல்ஏ பெ. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதனால் தற்போது  நாமக்கல்  நகராட்சியில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்ததோடு, எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாத நகராட்சியாக மாறி உள்ளது.