சென்னை,
நடிகர் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாளையொட்டி அவரது மணி மண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் கமலஹாசன் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சிவாஜியை மதிப்பார்கள். யாரும் கெஞ்சத் தேவையில்லை என்று கூறினார்.
தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் மணி மண்டபத்தை திறந்து வைத்து சிவாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பாக இந்த விழாவில், நடிகர்கள் கமலஹாசன், ரஜினி, சிவாஜி குடும்பத்தினர் உள்பட அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சமீபகாலமாக தமிழக அரசியல் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும் ரஜினி, கமல் இன்று தமிழக அமைச்சர்களுடன் சிவாஜி விழாவில் கலந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது,
மாநில, தேசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் எங்கள் அய்யா சிவாஜி கணேசன். அவர் ஒருவேளை சினிமாவில் நடிக்கவில்லை என்றால் சினிமா ரசிகனாக இங்கு வந்திருப்பேன். இந்நிகழ்ச்சிக்கு உள்ளே வர அனுமதி இல்லை என்றாலும் நான் வெளியே நின்றிருப்பேன்.
இந்த நிகழ்ச்சியில் அரசியல் இல்லை. எத்தனை முதல்வர்கள் வந்தாலும், ஆட்சிகள் வந்தாலும் சிவாஜியை மதிப்பார்கள். அதற்காக யாரும் கெஞ்சத் தேவையில்லை.
சிவாஜியின் அடியொற்றி தவழ்ந்த குழந்தைகளில் நானும் ஒருவன். இங்கு ரசிகனாக சிவாஜிக்கு நன்றி சொல்ல வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.