டில்லி
இந்திய கத்தோலிக்க பேராயர் சங்கம் யாரும் சிறுபான்மையினர் தேசபக்தியை நிரூபிக்க சொல்லக் கூடாது என தெரிவித்துள்ளது.
இந்திய கத்தோலிக்க சபையின் ஒரு பிரிவாக இந்திய கத்தோலிக்க பேராயர் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 2 கோடி பேர் உள்ளனர். இந்த சங்கத்தின் கல்வி மற்றும் கலாசாரத்துறையின் செயலராக ஃபாதர் ஜோசப் மணிபாதம் என்பவர் பதவி வகித்து வருகிறார். அவர் நடைபெற உள்ள மக்களவை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “மத நம்பிக்கைகள், உணவு பழக்கங்கள் மற்றும் கலாசார வேற்றுமைக்காக கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இது சிறுபான்மையினரிடையே அச்சத்தை உண்டாக்குகிறது. ஒரு மதத்தை பின்பற்றவும், போதிக்கவும் பிரசாரம் செய்யவும் அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. அதை யாரும் தடை செய்யக் கூடாது.
தேசபக்தி என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உள்ளது. அது சிறுபான்மையினருக்கும் உள்ளது. சிறுபான்மையினரை பார்த்து யாரும் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என சொல்லக்கூடாது/.
தற்போது கல்வித் துறையில் மாறுதல் என்ற பெயரில் சரித்திரம் மாற்றப்பட்டு காவி மயமாக்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்தவேண்டும். கடந்த 1542லிருந்து இந்திய கல்விக்கு கிறித்துவ மிஷனரிகள் சேவை செய்து வந்துள்ளனர் என்பதை அரசு அங்கீகரிக்க வேண்டும். இன்றும் கிறித்துவ மிஷனரிகள்தான் நிறைய பள்ளிகளை நடத்தி வருகின்றன.
எனவே கிறித்துவ பள்ளி தாளாளர்களை பாடப்புத்தக குழுவில் சேர்த்து அவர்களின் அனுபவங்களை கல்வித்துறை பயன்படுத்த வேண்டும். தேசிய தனித்தன்மை பொருந்திய அமைப்புளான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சிபிஎஸ்இ, தேர்வு கழகங்கள், ஐஐடி, ஐஐஎம், நீதித்துறை போன்றவைகளின் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது.
இந்த அமைப்புகள் எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி இயங்க அனுமதிக்கவேண்டும். இந்த அமைப்புகள் மீது பொதுமக்கள் அரசு அலுவலகங்களை விட அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் பல சிறுபான்மையினர் அமைப்புகள் ஒரு கிறித்துவ உறுப்பினர் கூட இல்லாத நிலையில் உள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த நிலை உள்ளது. இதை மாற்றி கிறித்துவ உறுப்பினர்களை அரசு நியமிக்க வேண்டும்.
அரசு பிரிவினையை ஊக்குவித்து ஒற்றுமையை குலைக்கிறது. அதை மாற்றி அனைத்து தரப்பினரையும் அரசு அரவணைத்து செல்ல வேண்டும். தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள் உள்ளிட்டோர் மீது அரசு தனிப்பட்ட அக்கறை செலுத்த வேண்டும். கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மக்களுக்கும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். தீண்டாமை மற்றும் ஜாதிப் பிரிவுகள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடப்போர் மீது கடும் நடவடிககை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.