சென்னை: பக்கத்து திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் – தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என அமைச்சர் இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேத்த டாக்டர் அ.தீப்தி – மு.விஷ்வக்சேனா ஆகியோரது திருமணம் இன்று திருவாண்மியூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது, இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை எண்ணி நாமெல்லாம் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டு இருக்கிறோம். பக்கத்தில் இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நான் அந்த பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை. இது நம்முடைய வீட்டு திருமணம். எனவே அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள் தான் நம்மை அழிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். தி.மு.க. அழிந்த வரலாறே கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.
இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக, திராவிட மாடலில் நடைபெறக்கூடிய திருமண விழாவாக இந்த திருமண நிகழ்ச்சி இங்கே நிறைவேறி இருக்கிறது. இந்த திருமணத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், தோழமை கட்சி தலைவர்கள் வாழ்த்த வந்திருக்கிறார்கள். அனைவரின் சார்பிலும் நான் மட்டுமே வாழ்த்தினால் போதும் என்று என்னை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவரின் சார்பில் மணமக்களை வாழ்த்த கடமைப்பட்டு இருக்கிறேன்.
நான் உடல் நலிவுற்று சற்று ஓய்வில் இருந்தாலும் இந்த திருமணத்துக்கு எப்படியும் வர வேண்டும் என்ற அந்த நிலையில் தான் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். நான் இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு போகவில்லை. இயற்கை சூழல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கூட்டம் கோட்டையில் நடைபெறுகிறது. அங்கு போகிறேன். அதனால் தான் நான் மட்டுமே பேசிவிட்டு மணமக்களை வாழ்க என்று வாழ்த்தி பாவேந்தர் பாரதிதாசன் கூறிய வீட்டிற்கு விளக்காக நாட்டிற்கு தொண்டர்களாக இருக்க வேண்டும் என்று மணமக்களை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.