தைபே

தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில் கொரோனா பாதிப்பு தொடங்கியது.   பின்பு அது சீனா முழுவதும் பரவியது.   தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி உள்ளது.   குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி பல ஐரோப்பிய நாடுகளில் மிகக் கடுமையான ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆயினும் இந்த நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   உலக அளவில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் சீன குடியரசு நாடான தைவான் நாட்டில் கடந்த ஏப்ரல் 12 முதல் உள்ளூரில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு எற்படவிலை.  முதலில் 551 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்து இருந்தனர்.  தைவான் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் 200 நாட்களாக ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை.

ஜனவரி மாதம் முதலே தைவான் தனது எல்லைகளை மூடியது.  அத்துடன் பயணக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டது.  இதுவரை எல்லைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.    யாரேனும் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் அவருக்கு தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டனர்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசு இலவச முகக்கவசங்களை வழங்கியது.    தைவானில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றாலும் சென்ற இரு வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியதால் உடன் பயணித்தவர் அனைவரும் தனிமையில் உள்ளனர்.