திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் இனி புதிய பார்கள் திறக்கப்பட மாட்டாது அமைச்சர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் அரசு மது விற்பனையை குறைத்து சட்டம் இயற்றியது.   அதை ஒட்டி மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மட்டுமே பார்கள் அமைக்க அனுமதி வழங்கியது.    அத்துடன் நகராட்சி அல்லாத இடங்களில் உள்ள பார்கள் மூடப்பட்டன.    தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் இந்த மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டு வருகிறது.

சுமார் 10000 மக்களுக்கு மேல் வசிக்கும் பஞ்சாயத்துக்களை நகராட்சியாக அரசு அறிவித்துள்ளது.    இதனால் அந்த இடங்களில் மூடப்பட்டுள்ள 171 பார்கள் மற்றும் 499 கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிய வந்துள்ளது.   மேலும் பல புதிய பார்கள் திறக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகின.   இதற்கு பல தரப்பு மக்களிடமும் எதிர்ப்பு கிளம்பியது.

புதிய பார்கள் திறக்க கத்தோலிக்க சர்ச்சுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.   கேரள கத்தோலிக்க பிஷப் சங்க தலைஅர் சூசா பாக்கியம், “பஞ்சாயத்துப் பகுதிகளை நகராட்சியாக மாற்றி அங்கு மதுக்கடைகளையும் பார்களையும் திறப்பது மக்களுக்கு விரோதமானது.   அரசு சாராய வியாபாரிகளிடம் மொத்தமாக சரண்டர் அடைந்து விட்டது”  எனத் தெரிவித்தார்.

இதற்கு சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.    கத்தோலிக்க மக்கள் மது அருந்துவதை பிஷப்புகள் தடுத்து நிறுத்தியபின் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என கூறினார்கள்.    ஆனால் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலையை திடீரென மாற்றிக் கொண்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் கொடியேறி பாலகிருஷ்ணன் கட்சி இன்னும் புதிய மதுவிலக்கு கொள்கையை முடிவு செய்யவில்லை எனவும் இப்போதுள்ள நிலையில் புதிய பார்களை திறப்பது பற்றி எந்த ஒரு எண்ணமும் இல்லை என தெரிவித்தார்.

நேற்று கேரள மாநில ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் அரசுக்கு புதிய பார்கள் திறக்கும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.