சென்னை:

ஜெயலலிதாவின் உருவச்சிலை வடிவமைப்பில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை என,  அ.தி.மு.க. எம்.பி.யும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை  தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்த தம்பித்துரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்தான மனுவும் அளித்திருக்கிறார். இதனை பிரதமர் மோடி பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் உருவ சிலையில் சிறு குறைபாடுகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். இதில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ கிடையாது.

பிரதமர் மோடி சொல்லி தான் துணை-முதலமைச்சர் ஆனேன் என்று ஒ.பி.எஸ். கூறியது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.  அ.தி.மு.க. என்பது ஒரு ஆலமர இயக்கம். அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.விடம் தான் இருக்கிறது” என்று தம்பித்துரை தெரிவித்தார்.