டில்லி
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவை இல்லை எனத் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது இல்லை எனக் கூறும் கேரள அரசு அந்த அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் எனக் கூறி வருகிறது. ஆனால் அணை பாதுகாப்பாக உள்ளதால் நீர்மட்டத்தை குறைக்கத் தேவை இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிம்கன்றத்தில் நடைபெற்றது.
வழக்கு விசாரணையில் ”அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகள் கவலை அளிக்கக் கூடியவை ஆகும். அணையின் நீர் மட்டத்தை 141 அடிக்கு மேல் உயர்த்தினாலும் அணை பாதுகாப்புடன் இருக்கும்” எனத் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் வழக்கறிஞர் அணையைக் குறித்து நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தியதில் நீர்மட்டத்தில் மாற்றம் தேவை இல்லை என்பதும் அணை தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். நீதிமன்றம் அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாத போது இது குறித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன எனக் கேரள அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.