நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை! உயர்நீதி மன்றம் உத்தரவு

Must read

மதுரை:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை  என்று என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வான, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. மேலும் நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளை அழைத்தார் என்பத குறித்தும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்கவில்லை. ஆனால், அதற்குள் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.  கடந்த பிப்ரவரி மாதம்  விசாரணை நடைபெற்றபோது, சிபிசிஐடி தாக்கல் செய்திருந்த அறிக்கையை  உயர்நீதி மன்ற கிளையிலும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ” மாணவிகளிடம் 164 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் பெறவில்லை என்றும், உயர் அதிகாரிகள் யார் என்பதை விளக்கவில்லை என்றும், அவர்களிடம் விசாரிக்கவும் இல்லை என்று கூறினார். இதன் காரணமாக, வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் இருந்து,  சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

தொடர்ந்த ஆஜரான அரசு வழக்கறிஞர், “வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருகிறது. ஆகையால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்து உள்ளனர்.

அதில், நிர்மலாதேவியின் வழக்கு  இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை. மேலும், சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதித்த தடையையும் நீக்கி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நிர்மலா தேவி வழக்கு மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

 

More articles

Latest article