டெல்லி: வெளி மாநில தொழிலாளர்கள், மாநிலங்களில் தங்கி இருக்கிறார்களோ, அங்கேயே இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் சில பணிகளுக்கு சில தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது.
இந் நிலையில், ஊரடங்கால் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல், வெளி மாநில முகாம்களில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்ல அனுமதி கிடையாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது: வெளி மாநில தொழிலாளர்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் உள்ள அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கான வேலைகளை அடையாளம் கண்டு வழங்கும் பணி உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.
தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் போது உரிய சுகாதார விதிகளை அமல்படுத்த வேண்டும். பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உணவு வசதி வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.