சென்னை :
ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய புதிய பேருந்துகளை வாங்க தமிழக போக்கு வரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை மனம் இருக்கிறது என்று கூறிய தமிழக அரசு தற்போது, 2 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணி ஓய்வு தொகை கொடுக்காததால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, சமீபத்தில் பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.
மேலும் ஒரு நாளைக்கு பேருந்து சேவை காரணமாக 9 கோடி ரூபாய் நஷ்டம் அடைவதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது 2000 புதிய பஸ்களை தனியார் பேருந்துகளுக்கு இணையாக வாங்க முடிவு செய்திருப்ப தாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில், முதல்கட்டமாக படுக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய 40 பஸ்கள் உள்பட மொத்தம் 2 ஆயிரம் பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படுக்கை வசதியுடன் கூடிய புதிய சொகுசு பஸ்கள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும்.
இது தவிர மேலும், 200 பேட்டரி மூலம் இயங்கும் பஸ்களை மத்திய அரசு பங்களிப்புடன் வாங்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.