ஜெய்ப்பூர்:
தனது டிவிட்டர் பக்கத்தை மாற்றியது ஏன்? என்பது குறித்து, மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை,’’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜோதிராதித்யா சிந்தியா .
இவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தை மாற்றி அமைத்துள்ளார். அதில், தனது பெயருக்கு கீழே, சமூக சேவகன், கிரிக்கெட் ஆர்வலர் என்று மட்டுமே பதிவு செய்துள்ளார்.
தான் சார்ந்துள்ள அரசியல் கட்சி குறித்தோ, தனது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி குறித்தோ எந்தவித குறிப்பும் இல்லாமல் உள்ளது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ம.பி மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றது. மாநிலத்தின் முதல்வராக மூத்த தலைவர் கமல்நாத் பொறுப்பேற்றார். முன்னதாக முதல்வர் பதவியை பிடிக்க கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
ஆனால், முதல்வர் பதவியை கமல்நாத் விட்டுக்கொடுக்க முன்வராத நிலையில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலையிட்டு, சிந்தியாவுடன் பேசி, இருவருக்கும் இடையே எழுந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால், அங்கு இருவருக்கும் இடையே சமாதானம் நிலவி வருவதாக கூறப்பட்டாலும், பனிப்போர் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான், சிந்தியா தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில், தான் ஒரு சமூக சேவகன் மற்றும் கிரிக்கெட் ரசிகன் என்று மட்டும் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வரும் சிந்தியா, அது குறித்தோ, தனது கட்சி குறித்தோ ஏதும் தெரிவிக்காதது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வரும் அதிருப்தி காரணமாகவே ஜோதிராதித்ய சிந்தியா இதுபோல பதிவிட்டிருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. சிந்தியாவின் இந்த நடவடிக்கையை அரசியல் ரீதியாக பலர் விமர்சித்து வந்த நிலையில், தற்போது ஜோதிராதித்யா சிந்தியா, தனது டிவிட்டர் பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மக்களின் ஆலோசனையின்பேரில்தான், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தை குறுகியதாக மாற்றினேன், இது தொடர்பாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்து உள்ளார்.