ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓபிசி வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது.

ஜார்க்கண்டில் 5 கட்டங்களாக சட்சபை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 30ம் தேதி நடக்கிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந் நிலையில் வாக்காளர்களை கவரும் விதமாக 40 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டு இருக்கிறது. அதில் முக்கிய அம்சமாக, ஓபிசி வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறது.

ராஞ்சியில், தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் முக்கிய தலைவரான ஆர்பிஎன் சிங், மாநில தலைவர் ரமேஷ்வர் ஓரான் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

இது வெறும் எங்களின் தேர்தலுக்கான அறிவிப்பு அல்ல. மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி. அரசில் காலியாக உள்ள அனைத்து வேலைவாய்ப்புகள் பூர்த்தி செய்யப்படும். தற்காலிக பணியாளர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள்.

நாங்கள் யாருக்கு வேலை கொடுக்கவில்லையோ அவர்களுக்கு மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை அளிக்கப்படும் என்று கூறினார்.