‘நோ லாக்டவுன், ஆனால், ஊர்வலம், போராட்டம், பேரணி நடத்த தடை! கர்நாடகா அரசு அறிவிப்பு

Must read

பெங்களூரு : கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில்  ஊர்வலம், போரட்டம், பேரணி நடத்த தடை விதித்து  கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா  2வது அலை பரவி வருகிறது. இதனால் மீண்டும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாக வருகிறது. அதே வேளையில் 12வயது உட்பட்ட குழந்தைகளுக்கும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்கள்,  அரசு அதிகாரிகள், சுகாதாரத் துறை நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போதைய நிலையில், மாநிலத்தில் லாக்டவுன்  இரவு நேர ஊரடங்கு தேவையில்லை என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, “பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளேன். நிபுணர்கள் கூறிய பரிந்துரைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த பிப்ரவரி மாதம் 0.94 சதவீதம் இருந்த பாதிப்பு தற்போது 1.94 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து பரிசோதனை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 90 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளே நடத்தப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

கோரமங்களா உள்விளையாட்டு அரங்கத்தில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 5-ந் தேதி முதல் அந்த மையம் செயல்பட தொடங்கும்.  எச்.ஏ.எல் மற்றும் ஹஜ் பவனில் தலா 100 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகரில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் 1,166 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் ஒதுக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் 8 மண்டலங்களிலும் கொரோனா பரவலை கண்காணிக்கவும், அதனை தடுக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நிதி பிரச்சினை இல்லை. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை ஒவ்வொரு வரும் கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருக்க கூடாது.

மக்கள் அலட்சியம் காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்.

 கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படாது.

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகப்படியானோர் கூடுவதற்கு அனுமதி கிடையாது.

இதுவரை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 6.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article